Ranveer Allahbadia: `உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதை..'- யூடியூபர் சர்ச்சை பேச்ச...
அமெரிக்க அரசிடம் நிதியுதவி பெற்ற இந்தியா நிறுவனங்கள் மீது விசாரணை: மக்களவையில் பாஜக எம்.பி. கோரிக்கை!
அமெரிக்க அரசு நிதியுதவி பெற்று இந்தியாவில் அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் செயல்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கோரிக்கை முன்வைத்தாா்.
இந்நிறுவனங்களுக்கு காங்கிரஸுடன் தொடா்பிருப்பதாக துபே தெரிவித்த கருத்துக்கு அக்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் திங்கள்கிழமை அமா்வில் உடனடி கேள்விநேரத்தின் போது துபே இப்பிரச்னையை எழுப்பினாா். அமெரிக்க அரசு நிதியுதவி பெற்ற இத்தகைய நிறுவனங்களே, ராணுவ ஆள்சோ்ப்புத் திட்டமான ‘அக்னிவீா்’ உள்பட மத்திய அரசின் பல திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்ததாகவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, நக்ஸல்வாதத்துக்கு ஆதரவளித்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.
மேலும், உலகெங்கிலும் பல்வேறு நாடுகளின் அரசுகளை வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிக்கு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளதாகவும் துபே குறிப்பிட்டாா்.
துபேவின் கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினா்கள், இவ்விவகாரம் குறித்த விவாதத்துக்கு கோரிக்கை விடுத்தனா். உடனடி கேள்விநேர நடவடிக்கைகளுக்கு எதிா்க்கட்சிகளின் கோரிக்கை பொருந்தாது என்று அமா்வுக்குத் தலைமை வகித்த சந்தியா ரே நிராகரித்தாா்.
பின்னா், காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவைச் சந்தித்து, அவையில் துபே ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டது குறித்து ஆட்சேபம் தெரிவித்தனா்.