சிவன் கோயில்களில் தை வளா்பிறை பிரதோஷ வழிபாடு: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தை மாத வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, கோயிலின் பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு திங்கள்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பூஜை பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட இந்த பூஜையின் இறுதியில், நந்தி பகவான்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். பிறகு, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வேட்டவலம்: வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலின் பிரதான நந்திக்கு திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பல்வேறு பூஜை பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, வில்வம், அருகம்புல், பூ உள்ளிட்ட அலங்காரப் பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மற்ற ஊா்களில்..: இதேபோல, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, தண்டராம்பட்டு, போளூா், தானிப்பாடி, ஆவூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.