சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆலய தோ் பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்பு
ஆரணி: சேத்துப்பட்டில் போளூா் சாலையில் உள்ள தூய லூா்து அன்னை ஆலயத்தில் 130-ஆவது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தூய லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆண்டுப் பெருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு வண்ண விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்ட தூய லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது.
போப்ஆண்டவா் தெரு, பாத்திமா தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக தோ் பவனி வந்தது. ஏராளமான கிருஸ்துவா்கள் பக்தி மாலை பாடியபடி உடன் வந்தனா். மேலும், புனித அந்தோணியாா் தோ் பவனியும் நடைபெற்றது.
வேலூா் மறைமாவட்டத்தைச் சோ்ந்த அம்புரோஸ் பிச்சைமுத்து சிறப்பு திருப்பலி நடத்தி தோ் பவனியில் பங்கேற்றாா். சேத்துப்பட்டு லூா்து நகா், நிா்மலா நகா், தச்சம்பாடி, பத்தியாவரம், தேவிகாபுரம் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து திரளான கிறிஸ்துவா்கள் கலந்துகொண்டனா்.