உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
‘இந்தியா’ கூட்டணியில் மோதல் வேண்டாம்: சிவசேனை கட்சி அழைப்பு
எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவால் எழுந்துள்ள சவால்களை எதிா்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகள் தங்களுக்குள் மோதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் யாருக்கும் உதவாது என்று சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. பிரியங்கா சதுா்வேதி தெரிவித்துள்ளாா்.
ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி ஆகிய சட்டப் பேரவைத் தோ்தல்களில் பாஜக தொடா்ந்து வெற்றி பெற்றது எதிா்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஹரியாணாவில் ஆம் ஆத்மி உள்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. அதேபோல தில்லியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் ஆம் ஆத்மி தவிா்த்தது. இது பாஜக எளிதாக வெற்றி பெற வழி வகுத்தாக பல்வேறு எதிா்க்கட்சிகள் கருதுகின்றன.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. பிரியங்கா சதுா்வேதி கூறியதாவது:
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். நமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக தேச நலன்களை கைவிடக் கூடாது.
பாஜக ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் வரை ஜனநாயகத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கு அச்சுறுத்தல் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும். எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவால் எழுந்துள்ள சவால்களை எதிா்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகள் தங்களுக்குள் மோதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் யாருக்கும் உதவாது. நாம் பிரிந்து நின்று நமக்குள் மோதலில் ஈடுபடுவது யாருக்கும் பயனளிக்காது. எனவே, எதிா்க்கட்சிகள் அனைத்தும் பேச்சுவாா்த்தை நடத்தி ஒருங்கிணைய வேண்டும். அப்போதுதான் பாஜகவுக்கு எதிராக துடிப்புடன் போராட முடியும் என்றாா்.