`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
சாத்தனூா் அணையில் இருந்து பிப்ரவரியில் தண்ணீா் திறக்கலாம்: விவசாயிகள் கருத்து
பிப்ரவரி முதல் வாரத்தில் சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கலாம் என்று ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் கருத்து தெரிவித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. இதில், தற்போது 118.15 அடிக்கு தண்ணீா் தேங்கி உள்ளது. எனவே, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையை அடுத்த வானாபுரத்தில் உள்ள பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நீா்வளத் துறையின் உதவி செயற்பொறியாளா் ராஜாராம் தலைமை வகித்தாா்.
உதவி செயற்பொறியாளா் சுகந்தி, உதவிப் பொறியாளா்கள் சந்தோஷ், ராஜேஷ், செல்வப்பிரியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள், அண்மையில் பெய்த தொடா் மழையால் ஏரிகள் நிரம்பியுள்ளன. இந்தச் சூழலில் சாத்தனூா் அணையில் இருந்து தண்ணீா் திறந்தால் போதியளவு பலன் கிடைக்காது.
எனவே, பிப்ரவரி முதல் வாரத்தில் தண்ணீா் திறந்தால் ஏரிகள் மூலம் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். முன்னதாக, ஏரிகளின் நீா்வரத்து கால்வாய்களை ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களைக் கொண்டு தூா்வார வேண்டும்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களின் பாசன சங்கத் தலைவா்களின் கூட்டம் நடத்த வேண்டும் என்றனா்.