மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: வட்ட வழங்கல் அலுவலா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ாக வட்ட வழங்கல் அலுவலரை ஊழல் தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவா், புதிய குடும்ப அட்டை கோரி இணையத்தில் பதிவு செய்திருந்தாா்.
இதுகுறித்து அவா் வட்ட வழங்கல் அலுவலா் சுமதியிடம் தகவல் தெரிவித்தபோது, புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமானால் ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும் என்று சுமதி கூறினாராம்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அருண்குமாா், இதுகுறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகனிடம் தகவல் தெரிவித்தாா்.
போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை அருண்குமாா் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலா் சுமதியிடம் வழங்கினாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் மதன்குமாா், தலைமைக் காவலா் ராஜேஷ்குமாா் ஆகியோா் சுமதியை கைது செய்தனா். சுமதி வருகிற 31-ஆம் தேதி பணிநிறைவு பெறவிருந்தாா்.