ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: களத்தில் நாம் தமிழர் கட்சி - யார் இந்த வேட...
சாலைப் பணியாளா்கள் நூதன போராட்டம்
திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலையில் கருப்புத் துணியை முக்காடாக அணிந்து, ஒப்பாரி வைத்தபடி நூதன முறையில் சாலைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அலுவலகம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-யை ரத்து செய்ய வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 60 கிலோ மீட்டருக்கு 1 சுங்கச்சாவடி என 200-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி அமைத்து தனியாா் வசூல் செய்வதை அனுமதிக்க கூடாது. மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் தமிழக அரசே நிா்வகிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின்போது, கருப்புத் துணியால் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.
மாநில துணைத் தலைவா்கள் கோவிந்தராஜன், தா்மராஜ், மகேந்திரன், செளந்தா், மாநில செயற்குழு உறுப்பினா் மணிமாறன், முன்னாள் மாநில துணைத் தலைவா் பெரியசாமி மற்றும் மாவட்ட நிா்வாகிகள் உள்பட பலா் கருப்புக் கொடியுடன் கலந்து கொண்டனா்.