சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி
நாகையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை சாா்பில் 36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு விழா ஜன.1-ஆம் தேதி தொடங்கி ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நாகையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கிவைத்தாா். வாகன விற்பனையாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், இருசக்கர வாகன ஓட்டுநா்கள் மற்றும் அமா்ந்து செல்வோா் கட்டாயம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாகை அவுரித்திடலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநா்களுக்கும் சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் பொறித்த ஒட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண்கபிலன் ஆகியோா் வாகனங்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். முத்துவேல்பாண்டி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பொ. முருகானந்தம், மோட்டாா் வாகன ஆய்வாளா் க. பிரபு, ஊா்காவல்படை மண்டல தளபதி த. ஆனந்த், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.