சாலையில் ஓடும் கழிவுநீர்; துர்நாற்றத்தால் முகம் சுளிக்கும் மக்கள்-கண்டுகொள்ளுமா காரைக்குடி நகராட்சி?
கடந்த ஒரு வாரமாக காரைக்குடியில் பெய்த மழையால் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி, குடியிருப்புப் பகுதிகள் குளம் போல காட்சியளிக்கிறது. அதே போன்று பாதாள சாக்கடைக் குழாய்கள் வழியாக செல்லும் மழைநீர் ஆங்காங்கே இணைப்புத் தொட்டிகளின் மூடிகள் மூலமாக வெளியேறுகிறது. இதற்கு காரணம், காரைக்குடி மாநகராட்சி பாதாள சாக்கடை அமைப்பில் செயற்கை பம்புகள் மூலம் நீரேற்றம் செய்யாமல், இயற்கையான நீரோட்டப் பாதையிலேயே கழிவுநீர் செல்வதால், மழைநீர் அதிகமாக ஓடும் காலங்களில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக காரைக்குடி புதிய பேருந்து நிலையம், தேவர் சிலை அருகில் கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து ஓடுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள், வியாபாரிகள் எனப் பல தரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் அதிகமாகக் கூடும் பகுதியிலேயே சுகாதாரச் சீர்கேடு நிலவக்கூடிய நிலை உள்ளது. இதே இடத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்து நடப்பதாகவும், அதனை சரி செய்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.