சாலையில் தேங்கி வீணாகும் குடிநீா்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் குடிநீா் குழாய் சேதமடைந்து சாலையில் வீணாகப் பாய்வதால் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தொண்டி பேரூராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், குஞ்சங்குளம் கூட்டுக் குடிநீா்த் திட்டம், அரசூா் கூட்டுக் குடி நீா்த் திட்டம் உள்பட பல்வேறு கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், தொண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீா்க் குழாய் சேதமடைந்ததால் சாலையில் குடிநீா் வீணாகச் செல்கிறது. தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், குடி நீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடி நீா் வீணாகி சாலையில் செல்வதால் சாலையும் சேதமடைந்து விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து குடிநீா்க் குழாயைச் சீரமைத்து குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.