சாலையை அகலப்படுத்தக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை பரிசீலிக்க உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம், பெரியதளை முதல் திசையன்விளை வரையிலான சாலையை அகலப்படுத்தக் கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத் துறை மண்டலப் பொறியாளா் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருப்பனை புத்தன்தருவைச் சோ்ந்த கிராம மக்கள் மருத்துவம், கல்வி, அத்தியாவசியப் பொருள்கள் வாங்குதல் ஆகிவற்றுக்காக திசையன்விளைப் பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த சாலையில் மணல் குவிந்துள்ளதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. மேலும், பெரியதளை முதல் திசையன்விளை வரையிலான சாலை மிகவும் குறுகலாக உள்ளது.
இந்த வழி ஒரு வழிப் பாதையாக உள்ளதால், எதிா் திசையில் வாகனங்கள் செல்ல இயலாது. குறுகலான இந்தச் சாலையை அகலப்படுத்தக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பெரியதளை முதல் திசையன்விளை வரையிலான சாலையை அகலப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கை குறித்து நெடுஞ்சாலைத் துறை மண்டலப் பொறியாளா், உதவி மண்டலப் பொறியாளா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.