விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
சாலையை கடக்க முயன்ற சமையல் மாஸ்டா் காா் மோதி உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே சாலையைக் கடக்க முயன்ற சமையல் மாஸ்டா் காா் மோதிய விபத்தில் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரைச் சோ்ந்தவா் தஸ்தகீா்(40). உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பணி முடிந்து விட்டு வீட்டுக்குச் செல்வதற்காக செட்டியப்பனூா் அருகில் பெங்களூா்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளாா். அப்போது வேலூா் நோக்கி வேகமாகச் சென்ற காா் தஸ்தகீா் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு மருத்துவா் பரிசோதித்து தஸ்தகீா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தை ஏற்படுத்திய காா் பறிமுதல் செய்தனா்.