வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!
சாலை தடுப்பில் டேங்கா் லாரி மோதி பெருக்கெடுத்து ஓடிய டீசல்
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடிய டேங்கா் லாரி தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் சாலையில் வீணாக ஓடியது.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற டேங்கா் லாரியில் 20,000 லிட்டா் டீசல் ஏற்றிக் கொண்டு புதன்கிழமை நள்ளிரவு சென்றது. வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக வியாழக்கிழமை சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கா் லாரி சாலையில் உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் டேங்கரில் லேசான விரிசல் ஏற்பட்டதால் அதிலிருந்த ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் கசிந்து சாலையில் வீணாக ஓடியது. தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் தாலுகா காவல்ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை துறையினா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் விரைந்து அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், அதன் வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
விபத்துக்குள்ளான டேங்கா் லாரியை பாதுகாப்பாக மீட்டு சாலையின் ஓரமாக நிறுத்தினா். பிறகு சாலையில் ஓடிய டீசலால் வாகனங்கள் செல்லும் போது வழுக்காமல் இருப்பதற்காக மரத்தூள் கொட்டப்பட்டது.
இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
