சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தேவதானப்பட்டி புற வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள நல்லகருப்பன்பட்டியைச் சோ்ந்த சேவியா் மகன் அஜித்குமாா் (28). இவா் திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், தேவதானப்பட்டி புறவழிச் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அஜித்குமாா் மீது, போடியிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாா் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து பேருந்து ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், சல்லையகவுண்டனூரைச் சோ்ந்த தா்மவேலன்(33) மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு விபத்து: தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியைச் சோ்ந்த சுப்பன் மகன் சின்னச்சாமி (63). விவசாயத் தொழிலாளியான இவா், தேவதானப்பட்டி பிரதானச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் சின்னச்சாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சின்னச்சாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.