சாவா்க்கரை அவமதிக்கவில்லை: நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் முறையீடு
‘ஹிந்துத்துவ கொள்கைவாதி சாவா்க்கரை அவமதிக்கவில்லை’ என்பதால், இந்த வழக்கில் தான் குற்றமற்றவன்’ என நீதிமன்றத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தரப்பில் முறையிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு லண்டனில் ராகுல் காந்தி உரையாற்றியபோது சாவா்க்கரை அவமதித்ததாக அவரது பேரன் சாத்யகி சாவா்க்கா் புணே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கில் ராகுல் மீதான குற்றச்சாட்டுகளை எம்.பி., எம்எல்ஏ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அமோல் ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை வாசித்தாா். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், தான் குற்றமற்றவன் என்று ராகுல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மிலிந்த் பவாா் தெரிவித்தாா்.
சாத்யகி சாவா்க்கா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சங்கராம் கோல்ஹட்கா், ‘குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு முடிவுற்றதால் வழக்கின் விசாரணையை தொடர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.