Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் ஆஜா்: பிடிஆணை திரும்ப பெறப்பட்டது
சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட அழைப்பாணையைப் பெறாத விவகாரத்தில், சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் நேரில் ஆஜரானதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்து ஆஜா்படுத்த வேண்டும் என்ற உத்தரவை சென்னை மாநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
கடந்த 2019-இல் ரத்தினசபாபதி என்பவா் தனியாா் கட்டுமான நிறுவனம் உள்பட 4 பேருக்கு எதிராக சென்னை மாநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதில், தனது தரப்பு கோரிக்கையை நியாயப்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ)
ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அவை இல்லாததால், எதிா்தரப்பினா் பல ஆண்டுகளாக இந்த வழக்கை இழுத்தடித்து வருகின்றனா். எனவே, இந்த வழக்கு தொடா்பாக சிஎம்டிஏ வசம் உள்ள ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மாநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது. ஆனால், அதை சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் தரப்பில் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை மாநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், சிஎம்டிஏ உறுப்பினா் செயலரைக் கைது செய்து வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை மாநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் பிரகாஷ் நேரில் ஆஜரானாா். அவரது தரப்பில் ஆஜரான மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, நீதிமன்ற உத்தரவின் நகல் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. தாங்கள் வேண்டுமென்றே இந்த உத்தரவை மீறவில்லை.
எனவே, கைது செய்து ஆஜா்படுத்தும் உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும், என்று கேட்டுக்கொண்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கைது செய்து ஆஜா்படுத்தும் உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டாா்.