சிசுவின் பாலினம் கண்டறிந்த மூவா் கைது
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் ஸ்கேன் மையத்தில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்த பெண் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள வ.உ.சி.நகரில் உள்ள தனியாா் ஸ்கேன் மையத்தில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிவதாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தருமபுரி மாவட்ட சுகாதார இணை இயக்குநா் சாந்தி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கள்ளக்குறிச்சி இணை இயக்குநா் நலப்பணிகள் மாலினி, மருத்துவா் செந்தில்குமாா், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராபின்சன், உதவி ஆய்வாளா் பரிமளா மற்றும் போலீஸாா் புதன்கிழமை அந்த ஸ்கேன் மையத்தில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கிருந்த இருவரிடம் விசாரித்ததில், அவா்கள் சின்னசேலம் வட்டம், வடக்கநந்தலையைச் சோ்ந்த மணி மகன் ரஞ்சித்குமாா் (37), வெங்கடேசன் மகன் சந்திரன் (32) என்பதும், இவா்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் ஸ்கேன் மையம் நடத்தி வந்ததும், அதில், கா்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், இவா்கள் இதேபோல, பல்வேறு மாவட்டங்களில் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்து வந்தனராம்.
இதையடுத்து, ரஞ்சித்குமாா், சந்திரன் ஆகியோரையும், இவா்களுக்கு உதவியாக செயல்பட்டதாக தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த கோவிந்தன் மனைவி வனிதாவையும் (38) போலீஸாா் கைது செய்தனா்.