சித்தி விநாயக் கோயில்: ரூ.100 கோடி மதிப்பில் அழகுபடுத்தும் மும்பை மாநகராட்சி!
மகாராஷ்டிராவில் மிகவும் பணக்கார கோயிலாக சித்திவிநாயக் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோயில் மும்பை தாதர் பிரபாதேவி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடத்தில் இருக்கிறது.
பாலிவுட் பிரபலங்கள் ஒவ்வொரு படமும் வெளியாகும்போதும் இக்கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு கோயிலை சுற்றிய பகுதியில் அழகுபடுத்தும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கார்களை சாலையோரம் நிறுத்தவேண்டிய நிலை இருக்கிறது. இதையடுத்து முதல் கட்டமாக கோயிலையொட்டி போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக வாகனங்களை நிறுத்த கோயிலுக்கு அருகில் இரண்டு இடத்தில் பூமிக்கு அடியில் வாகன நிறுத்தம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

கோயில் நுழைவு வாயிலையும் புதுப்பித்து கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள தரை தளமும் மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. இரண்டாவது கட்டமாக கூட்டத்தை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் பக்தர்கள் சேவை மையம் ஒன்றை கட்டவும், பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் செக்போஸ்ட் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் நேரங்களில் அவற்றை கட்டுப்படுத்த இரண்டாவது நுழைவு வாயில் ஒன்றை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. மும்பை மெட்ரோ ரயில் கழகத்திடமிருந்து இறுதி ஒப்புதல் பெறவேண்டியிருக்கிறது. இந்த ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயிலுக்கு அருகில் மெட்ரோ ரயில் நிலையமும் இருக்கிறது. எனவே பூமிக்கு அடியில் அமைக்கப்படும் வாகன நிறுத்தம் மெட்ரோ ரயில் நிலையத்தோடும் இணைக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கான டெண்டர் விடும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பணிகள் தொடங்கியதில் இருந்து 12 மாதத்தில் அவற்றை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.