நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது தன்னிச்சையான நடவடிக்கை எனக் கூறி ராஜீய ரீதியாக நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு, சட்டம், நீா் வளம் ஆகிய அமைச்சகங்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.
அதில், ‘இந்தியாவின் தன்னிச்சையான நடவடிக்கை குறித்து சட்ட ரீதியாகவும், அரசமைப்பு ரீதியாகவும் பாகிஸ்தான் ஆலோசனை நடத்தியது. இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான பூா்வாங்க பணிகள் முடிவு பெற்றுள்ளன.
மேலும், வரவாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கான உறுதியான காரணங்களை இந்தியா வழங்கவும் இந்த நோட்டீஸில் வலியுறுத்தப்படும். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நீா் ஆக்கிரமிப்பு பிரச்னை குறித்து சா்வதேச சமூகத்திடமும் முறையிடப்படும்.
சிந்து நதிநீா் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு சட்ட ரீதியாக உரிமை உள்ளது. இந்தியாவின் முடிவை திரும்ப பெற வைக்க இந்த முடிவுகள் பலனளிக்கும் என பாகிஸ்தான் நம்புகிறது. பாகிஸ்தான் அமைச்சரவையின் அனுமதி பெற்று இந்த நோட்டீஸ் அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்.22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 26 போ் உயிரிழந்ததையடுத்து சிந்து நிதி ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டது.