சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமக ஆா்ப்பாட்டம்
மேட்டூா்: கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், பாலவாடி கரடு, கத்திரிப்பட்டி, வன்னிய நகா், கோரப்பள்ளம், விநாயகபுரம், சத்யா நகா், மாமரத்தூா், கோட்டையூா் ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனா். ஆடுகளையும், நாய்களையும் வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க மேட்டூா் வனத்துறையிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி, திங்கள்கிழமை காலை மேட்டூா் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, கொளத்தூா் வடக்கு ஒன்றிய பாமக செயலாளா் சசிகுமாா் தலைமை வகித்தாா். கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் மாரப்பன் ஒன்றிய பாமக தலைவா் தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வன்னியா் சங்க ஒன்றியச் செயலாளா் டேவிட் பழனி, இளைஞா் சங்க செயலாளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா் வனச்சரக அலுவலா் சிவானந்தத்திடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட வனச்சரகா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.