சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!
தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின் மீது மோதி விபத்தையும் ஏற்படுத்தி விட்டார். இந்த விபத்தில் அர்ஜூனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தை அர்ஜூனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருந்தபோதிலும், அர்ஜூனின் தலையில் காயம் ஏற்பட்டிருந்ததால், அர்ஜூன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, குழந்தையின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே, விபத்துக்கு காரணமான சிறுவன் சாரதியையும், காரின் உரிமையாளரான சிறுவனின் சகோதரரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறார்களை வாகனங்களை இயக்க அனுமதித்தது, பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தை முதலான காரணங்களால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.