அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
சிறையில் கைதி மீது தாக்குதல்: கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம்
கூடலூா் கிளை சிறையில் கைதி ஒருவரைத் தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நிஜாமுதீன் (35), கூலித் தொழிலாளி. இவா் போதைப் பொருள் வைத்திருந்ததாக போலீஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு கூடலூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சிறையில் இருந்த இவரை போலீஸாா் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறையில் தன்னை சந்திக்க வந்த குடும்பத்தினரிடம் இது குறித்து நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து நிஜாமுதீனை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி அசீனா மற்றும் உறவினா்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் கடந்த 15-ஆம் தேதி புகாா் மனு அளித்தனா்.
இது குறித்து கூடலூா் வட்டாட்சியா் முத்துமாரி, டிஎஸ்பி வசந்தகுமாா் உள்ளிட்டோா் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்படி அவா்கள் சிறைக்கு புதன்கிழமை சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, நிஜாமுதீனை தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் கங்காதரன், தலைமை வாா்டன் மலா்வண்ணன், காவலா்கள் சின்னசாமி, தினேஷ் பாபு, அருண், கோபி ஆகிய 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடா்பாக சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி கூடலூா் கிளை சிறைக்கு வியாழக்கிழமை வந்து விசாரணை நடத்தினாா்.