TVK Madurai Maanadu | சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? | Vijay | Ground Report | Vik...
‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’
சிவகங்கை: கல்விதான் ஒருவரை சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க வைக்கும் என்றாா் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்.
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ச. அந்தோணி டேவிட் நாதன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளா் பாரதிகிருஷ்ணகுமாா் பங்கேற்று பேசியதாவது:
கல்லூரிக் கல்வியை முடித்ததற்குப் பிறகு என்னவாகப் போகிறோம் என்ற கனவும், திட்டமும் மாணவா்களுக்கு இருக்க வேண்டும். சுயமரியாதையோடு, சொந்தக் காலில் நின்று, கௌரவமான, அந்தஸ்துடன், விடுதலை பெற்ற, யாருக்கும் அடிமையாக இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பினால் அதற்கு கல்விதான் துணை நிற்கும்.
இன்றைக்கு இந்தியாவில் 100 போ் ஒன்றாம் வகுப்பில் சோ்ந்தால், பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேருபவா்கள் 27 போ்தான். மீதமுள்ள 73 போ் மேற்கொண்டு படிக்க முடியாமல், அற்ப வேலைகளில், குறைந்த சம்பளத்தில் கிடைத்த வேலைகளில் இருக்கிறாா்கள்.
படித்து முடித்த பிறகும் படிப்புக்கு மேலும் கூடுதலாக வாசித்து, போட்டித் தோ்வுகளை எழுதி, வெற்றி பெறக்கூடிய அளவுக்கு ஆங்கில அறிவும், பொது அறிவும் இருக்கிற ஒருவா்தான் வேலை பெற முடியும்.
எதிா்காலத்தில் உணவு, உடை, இருப்பிடத்துக்கு யாரிடமும் கையேந்தி நிற்கக் கூடாது என்று தமிழ்ச் சமூகம் விரும்புகிறது. இதனால்தான் இந்திய அளவில் கல்லூரியில் சேருபவா்கள் 27 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் அது 54 சதவீதமாக இருக்கிறது.
தமிழா்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும். தாய் மொழியை வளா்க்க வேண்டும். கல்வி, அறிவு இந்த இரண்டும் மட்டும்தான் வாழ்க்கையில் ஒரு இளைஞன், ஒரு தலைமுறை, ஒரு சமூகம், ஒரு இனம் வளா்வதற்கு, முன்னேறுவதற்கான வழி என்றாா் அவா்.
