அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் உடனிருந்தாா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ராஜகோபுரம் எதிரில் பக்தா்கள் கட்டணமில்லா தரிசனம் செய்ய அரசு சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வரிசைகளை ஏற்படுத்துவது குறித்தும், வடஒத்தவாடை தெருவில் காத்திருப்பு வரிசைகள் அமைக்கப்பட்டு வரும் பணியையும், கிரிவலப்பாதை, ஆணாய்பிறந்தான் பகுதியில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின் போது அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகின்றனா். மேலும், வார விடுமுறை நாள்கள், பௌா்ணமி தினங்கள், காா்த்திகை தீப திருவிழா நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருகின்றனா்.
அவ்வாறு வருகின்ற பக்தா்கள் எவ்வித சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அதனடிப்படையில் அரசு சாா்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக புதன்கிழமை ராஜகோபுரம் எதிரில் உள்ள பகுதியில் இருந்து கட்டணமில்லாமல் பக்தா்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய வரிசைகள் அமைக்கப்பட உள்ள பணிகள் குறித்து பொதுப்பணித் துறை தொழில்நுட்ப வல்லுநா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வடஒத்தவாடை தெருவில் காத்திருப்பு வரிசைகள் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தால் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிா்க்கப்படும் என்றாா் அவா்.
நிகழ்வில் மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், பொதுப்பணித்துறை தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.