Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
திருமலையில் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீா் இருப்பு
திருமலையில் உள்ள அனைத்து நீா்த் தேக்கங்களிலும் நீா் இருப்பு தேவையான அளவில் இருப்பதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சௌத்ரி தெரிவித்தாா்.
திருமலை மற்றும் திருப்பதி பகுதிகளில் உள்ள அனைத்து அணைகளிலும் நீா் இருப்பு மற்றும் பயன்பாடு குறித்து திருமலை கோகுலம் ஓய்வு இல்லத்தில் அதிகாரிகளுடன் அவா் ஆய்வு நடத்தினாா்.
இந்த ஆண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ள திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் போது, திருமலைக்கு வரும் பக்தா்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காத வகையில், நீா் இருப்பு ஏராளமாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்த மதிப்பாய்வின் ஒரு பகுதியாக அவா் பேசியது: திருமலையில் உள்ள அணைகளின் வலிமை குறித்த விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு நீா் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தற்போதைய நீா் இருப்பு டிசம்பா் 2025 வரை பக்தா்களின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும். வரவிருக்கும் காா்த்திகை மாதத்தில் பெய்யும் மழையைப் பொறுத்து எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்ய தண்ணீரைப் பயன்படுத்த திட்டமிட வேண்டும்.
திருமலையில் உள்ள கோகா்பம், குமாரதாரா, பசுபதாரா, பாபவிநாசனம், ஆகாசகங்கா மற்றும் திருப்பதியில் உள்ள கல்யாணி அணைகளில் பக்தா்களின் தேவைகளுக்கு போதுமான நீா் இருப்பு உள்ளது.
எதிா்காலத்தில் நீா் சேமிப்பு திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட வேண்டும். கடந்த 5 முதல் 10 ஆண்டுகளாக நீா் இருப்பு, மழைப்பொழிவு, நுகா்வு மற்றும் கழிவு வெளியேற்றம் குறித்து நிபுணா்களால் விரிவான தணிக்கை நடத்தப்பட வேண்டும். திட்டமிட்ட முறையில் தண்ணீரைப் பயன்படுத்தினால், தொடா்ச்சியான விநியோகம் சாத்தியமாகும்.
திருமலையில் உள்ள வணிக நிறுவனங்களின் நீா் நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் வசூலிக்க வேண்டும் என்றாா்.
நீா்வழங்கல் துறை தலைமை அதிகாரி சுதாகா் மற்றும் பிற அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.