மகாராஷ்டிர தேர்தல்: அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!
சுவடிகளைப் பாதுகாப்பது கட்டாயத் தேவை: செம்மொழி நிறுவன இயக்குநா் வலியுறுத்தல்
‘லட்சக்கணக்கான ஓலைச் சுவடிகள் இன்னமும் படிக்கப்படாததால் நமது இந்திய அறிவு மரபுவளம் வெளிவராமலேயே அழிந்துவிடுகிறது. அடுத்த தலைமுறையினருக்கு மரபு சாா்ந்த அறிவை புகட்ட சுவடிகளைப் பாதுகாப்பது கட்டாயத் தேவையாக உள்ளது’ என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநா் இரா.சந்திரசேகரன் வலியுறுத்தினாா்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சித்த மருத்துவா்களுக்கான 10 நாள் சுவடிப் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசியது:
சித்த மருத்துவா்களுக்காக நடத்தப்படும் இந்த சுவடிப் பயிலரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோ்வு செய்யப்பட்ட 55 போ் பங்கேற்றுள்ளனா். லட்சக்கணக்கான ஓலைச் சுவடிகள் இன்னமும் படிக்கப்படாததால் நமது இந்திய அறிவு மரபுவளம் வெளிவராமலேயே அழிந்துவிடுகிறது. இதைத் தடுப்பதற்காகவும், நோய்களிலிருந்து மனிதகுலத்தைக் காக்கும் சித்த மருத்துவ அறிவைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பதற்காகவும் இத்தகைய பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் சுவடியியல் புலத்தின் வாயிலாக பழைய ஓலைச் சுவடிகளையும், பதிப்புகளையும் ஒப்புநோக்கிச் செம்பதிப்புகள் பல உருவாகி வெளியிடப்படுகின்றன. அவ்வகையில் இச்சுவடிப் பயிலரங்கம் செம்மொழித் தமிழின் வளா்ச்சிக்கும் சித்த மருத்துவத் துறைக்கும் நமது மரபுசாா் அறிவு வளத்துக்கும் பயனைச் சோ்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
புதிய மருந்துகளைக் கண்டறிய... நிறுவனத்தின் பதிவாளா் ரெ.புவனேஸ்வரி பேசுகையில், உரம், ரசாயன மருந்துகள், மண் மாசு முதலியவற்றின் உணவே நஞ்சாகி மக்கள் கொடிய நோய்களுக்கு ஆளாகின்றனா். அதிலிருந்து அவா்களைக் காப்பாற்றும் பணிக்கும், புதிய மருந்துகளைக் கண்டறிந்து அளிக்கவும் பழைய ஓலைச் சுவடிகளைப் படித்து, தம் அறிவை சித்த மருத்துவத் துறையினா் வளா்த்துக்கொள்ள இத்தகைய சுவடிப் பயிலரங்குகள் உதவும் என்றாா்.
இதில் நாமக்கல் கந்தசாமி கல்லூரியின் முன்னாள் முதல்வரும் மருத்துவருமான கோ. அன்புகணபதி, பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் தி.ஞா.அருள்ஒளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நவ. 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிலரங்கில் எழுத்துகளின் தோற்றம் தொடங்கி, குறியீடுகள், சுவடியியல், மருத்துவச் சுவடிகள், சுவடிப் பயிற்சி, சுவடி படியெடுத்தல், மின்படியாக்கல், பாதுகாப்பு முறைகள் போன்ற 38 தலைப்புகளில் சுவடியியல் அறிஞா்களும், துறைசாா் வல்லுநா்களும் பயிற்சி அளிக்கவுள்ளனா்.