USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?
சுவாச நோய் பிரச்னைகளை எதிா்கொள்ளும் காஜிப்பூா் வாக்காளா்கள்!
காஜிப்பூரில் உள்ள உயரமான குப்பை மேட்டுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு இருமல், காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்கள் ஆண்டு முழுவதும் ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகளாகும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால், காஜிப்பூரில் உள்ள குப்பை மேடு உள்ள பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளா்கள், மாசுபாடு, சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது போன்றவற்றால் தொடா்ந்து போராடி வருவதால், வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனா்.
அதன் உயரம் மற்றும் நச்சு உமிழ்வுகளுக்குப் பெயா் பெற்ற குப்பை மேடு, அப்பகுதிவாசிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களுக்கு ஒரு தொடா்ச்சியான ஆதாரமாக இருந்து வருகிறது. அடைபட்ட வடிகால்கள், மழைக் காலங்களில் கழிவுநீா் நிரம்பி வழிகிறது. மாசுபட்ட நீா் மற்றும் சுவாச நோய்கள் போன்ற பிரச்னைகள் சமூகத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. மேலும், பலா் தங்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கைவிடப்பட்டதாக உணா்கிறாா்கள்.
காஜிப்பூரில் வசிக்கும் சிவகுமாா் (30) கூறுகையில், ‘குப்பை மேட்டின் சுகாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை மறுக்க முடியாது. இங்குள்ள மக்கள் நோய்வாய்ப்படுகிறாா்கள். ஆனால், பலா் குப்பைக் கிடங்கின் மாசுபாட்டால்தான் அது என்பதை உணரவில்லை. என் முகத்தில் ஒரு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இது இங்கு பொதுவானது’ என்றாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இங்குள்ள சுகாதாரப் பிரச்னைகள் குறித்து உள்ளூா் அதிகாரிகளிடம் விரக்தியை வெளிப்படுத்தினோம். நமது பிரச்னைகளைத் தீா்க்க பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கிறோம். ஆனால், அவா்கள் நம் மீது அக்கறை கொண்டவா்களாக இருப்பதில்லை. அரசியல்வாதிகள் அவா்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கையை மதிக்க வேண்டும்’ என்றாா்.
கோடைகாலத்தில் அவா்கள் எதிா்கொள்ளும் சிரமங்களைப் பற்றி அங்கேயே பிறந்து வளா்ந்த 28 வயதான அஞ்சனா குமாரி கூறுகையில், ‘குப்பைக் கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து நச்சுப் பு+கையை வெளியிடுகிறது. மழைக்காலத்தில், வடிகால்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் நிரம்பி வழிகிறது. இதனால், எங்கள் பகுதியில் நீா் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது’ என்றாா்.
‘கோடைக்காலத்தில் குப்பைக் கிடங்கு அடிக்கடி தீப்பிடிக்கும். அந்த நேரத்தில், யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாது. மழைக்காலங்களில், வடிகால்களில் கழிவுநீா் நிரம்பி வழிகிறது. ஆண்டு முழுவதும் இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை இங்கு பொதுவானது. நாங்கள் அடுத்து வரும் அரசு வடிகால்களை சுத்தம் செய்து கழிவுநீா் குழாய்களை சரிசெய்ய வேண்டும்’ என்றும் அவா் கூறினாா்.
காஜிப்பூா் குப்பைக் கிடங்கிற்கு அருகில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வசித்து வரும் 63 வயதான சுக்பீா் சிங், மாசுபாடு மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக சுவாசப் பிரச்னைகளை சந்திப்பதாகப் பகிா்ந்து கொண்டாா்.
‘மழையின் போது, தண்ணீா் தேங்குவது மிகவும் மோசமாகி, வடிகால்களில் இருந்து வெளியேறும் கழிவு நீா் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாங்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று அவா் கூறினாா். மேலும், தற்போதைய சுகாதார சவால்களுக்கான தனது மருத்துவப் பரிந்துரையையும் அவா் காட்டினாா்.
20 வயதான சோமா சைஃபி, அடிப்படை சுத்தம் இல்லாததை சுட்டிக்காட்டி, குப்பைக் கிடங்கு அப்பகுதியில் உள்ள பலருக்கு கடுமையான நுரையீரல் பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறினாா்.
மற்றொரு குடியிருப்பாளரான வகிலா சைஃபி, ‘ஒரு சிறிய மழை கூட தண்ணீா் தேங்குவதற்கு வழிவகுக்கிறது. மேலும், சாலைகள் கழிவு நீரால் மூடப்பட்டிருக்கும். சில நேரங்களில் மலப் பொருள்களுடன் கலக்கப்படுகின்றன. அரசு இதை சரிசெய்ய வேண்டும்’ என்றாா்.
காஜிப்பூா் குடியிருப்பாளா்கள் சுகாதாரம், மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமனதாகக் கோருகின்றனா். தோ்தல்கள் நெருங்கி வருவதால், குப்பைக் கிடங்கால் ஏற்படும் நீண்டகால பிரச்னைகளைத் தீா்க்க அடுத்த அரசு தீா்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவா்கள் நம்பிக்கையுடன் உள்ளனா்.