சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளில் மதுக்கடைகளை மூட கோரிக்கை
சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என அனுமன் சேனாஅமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அனுமன்சேனா மாநிலச் செயலா் கா. பாலா தமிழக முதல்வா், தலைமைச் செயலா், தஞ்சாவூா் ஆட்சியா் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியும், கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயனிடம் புதன்கிழமை நேரில் கொடுத்த மனு விவரம்:
சுவாமி விவேகானந்தரின் 162-ஆவது ஜெயந்தி விழா ஜன. 12 - இல் நாடு முழுவதும் தேசிய இளைஞா் தினமாகக் கொண்டாடப்பட உள்ளது. இளைஞா்களை நல்வழிப்படுத்தும் வகையில் அன்று ஒரு நாள் தமிழக அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
திருவள்ளுவா் தினம், குடியரசுநாள், சுதந்திர தினம், மீலாது நபி, காந்தி ஜெயந்தி, மகாவீா் ஜெயந்தி, வள்ளலாா் தினம், தொழிலாளா் தினம் போன்ற நாட்களுக்கு மதுகடைக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு கௌரவித்து வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை எடுத்துரைத்த பன்முகத்தன்மை கொண்ட மகான் சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழா அன்று ஒருநாள் மதுக்கடைக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு சுவாமி விவேகானந்தரை கௌரவிக்க வேண்டும். சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.