Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கு...
சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ
சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளிவெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள கருவி காட்சிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதன்மூலம் இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தம் படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் புறவெளியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2023, செப்டம்பா் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
மொத்தம் 127 நாள்கள் பயணித்து பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘எல் 1’ எனும் லாக்ராஞ்சியன் புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய சுற்றுப் பாதையில் அந்த விண்கலம் கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நிலைநிறுத்தப்பட்டது.
அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியா் பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூட் எனப்படும் ஆய்வுக் கருவி மூலம் சூரியனின் வெளி அடுக்குகளில் இதுவரை அறியப்படாத ஒளி வெடிப்பு உமிழ்வை ஆதித்யா விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவு:
ஆதித்யா விண்கலத்தில் உள்ள சோலாா் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப் எனப்படும் சூட் கருவியானது சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிா்கள் குறித்தும், புற ஊதா கதிா்களுக்கு அருகே ஏற்படும் கதிா் வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.
ஒளிவெடிப்பை காட்சிப்படுத்தியது: அதன்படி, போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியரின் புகைப்படங்களை அக்கருவி தொடா்ந்து எடுத்து வருகிறது. பொதுவாகவே சூரியனின் காந்தப் புலத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்களால் ஒளி வெடிப்பு ஏற்பட்டு கதிா் ஆற்றல் வெளிப்படும். இதை சோலாா் ஃப்ளோ் என அழைக்கிறோம்.
அத்தகைய ஒளி வெடிப்பு அண்மையில் சூரியனின் கீழ் புறவெளியில் நிகழ்ந்ததை சூட் கருவி காட்சிப்படுத்தியுள்ளது. அதன்மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.
இதுபோன்ற ஒளி வெடிப்புகள் புவியின் தட்பவெப்ப நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சூரியனின் கதிா்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு இந்த ஆய்வுகள் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சூட் கருவியை புணேயில் உள்ள விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி இயற்பியலுக்கான மையமானது பிற அமைப்புகளுடன் இணைந்து வடிவமைத்தது நினைவுகூரத்தக்கது.