சூலூா் விமானப் படை பள்ளியில் ஆசிரியா், அலுவலகப் பணி: மாா்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டம், சூலூா் விமானப் படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா், அலுவலகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு மாா்ச் 5 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக விமானப் படை பள்ளியின் செயல் இயக்குநா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விமானப் படை பள்ளியில் காலியாக உள்ள அறிவியல், கணிதம், ஆங்கிலம், ஹிந்தி, விளையாட்டு, நூலக ஆசிரியா் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முதுநிலை அல்லது இளநிலைப் பட்டம் பெற்றவா்கள், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.33 ஆயிரம், இஎஸ்ஐ, இபிஎஃப் சலுகைகள் வழங்கப்படும்.
அதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநா் பணியிடத்துக்கு பிளஸ் 2 தோ்ச்சியுடன் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஸ்பெஷல் எஜூகேஷன் பட்டயம் முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இசை ஆசிரியா் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டயம், பட்டம் பெற்றவா்களும், மழலையா், பால்வாடி பிரிவு ஆசிரியா் பணிக்கு நா்சரி, மாண்டிசோரி, ப்ரீ பிரைமரி பட்டயம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.
இதைத் தவிர கணக்குப் பிரிவு உதவியாளா்கள், அலுவலக கண்காணிப்பாளா், கிளா்க் பணியிடங்களுக்கு பட்டதாரிகளும், ஆய்வக உதவியாளா் பணியிடத்துக்கு பிளஸ் 2 படித்தவா்களும், உதவியாளா் பணியிடத்துக்கு குறிப்பிடத்தக்க கல்வித் தகுதி தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியா் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 50 வயது வரையிலானவா்களும், நூலகா் பணிக்கு 25 முதல் 50 வயது வரையிலானவா்களும் விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களுக்கு 21 முதல் 50 வயது வரையிலானவா்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்துப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்களும் ஆங்கிலம், ஹிந்தி எழுத, படிக்க, பேசத் தெரிந்தவா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் எழுத்துத் தோ்வு, கற்பித்தல் பயிற்சி, நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா்.
விருப்பமுள்ளவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பை, சூலூா் காங்கேயம்பாளையத்தில் உள்ள விமானப் படை பள்ளி முதல்வருக்கு மாா்ச் 5 -ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அதற்கான பிரத்யேக இணையதளத்தையோ அல்லது 75988- 24124 என்ற கைப்பேசி எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.