செங்கத்தில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன, சொகுசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
செங்கத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில், தினசரி குளிா்சாதன மற்றும் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. செங்கம் ஊராட்சி ஒன்றியம் 44 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியமாகும்.
இந்த நிலையில், செங்கம் நகா்புற பகுதியில் வசிப்பவா்களும், 44 கிராம ஊராட்சிகளில் வசிப்பவா்களில் பட்டதாரி மற்றும் தினக்கூலி தொழில் செய்பவா்கள் அதிகளவில் சென்னையில் வேலை செய்து வருகிறாா்கள்.
மேலும், செங்கம் பகுதியில் இருந்து ஏராளமான மாணவா்கள் சென்னையில் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகளில் பயின்று வருகின்றனா்.
கல்லூரிக்கு செல்லும் மாணவா்களாக இருந்தாலும், சென்னையில் தங்கி வேலை செய்பவா்களானாலும் சரி, இவா்கள் சென்னை செல்லவேண்டுமென்றால், திருவண்ணாமலை சென்று அங்கிருந்து வேறு பேருந்தில் ஏறிச் செல்லவேண்டும்.
அரசுப் போக்குவரத்துக்கழக செங்கம் பணிமனையில் இருந்து, தினசரி திருவண்ணாமலை, செஞ்சி வழியாக அடையாறுக்கு 3 பேருந்துகளும், மாதவரத்துக்கு ஒரு பேருந்தும், போளூா் வழியாக 3 பேருந்துகளும், செங்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 8 பேருந்துகள் என 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழக அரசு பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன மற்றும் சொகுசுப் பேருந்துகளை இயக்குகின்றன.
ஆனால், செங்கம் பகுதியில் இருந்து இயக்கப்படும் 15 அரசுப் பேருந்துகளும் சாதாரண பேருந்துகளாகவே உள்ளன.
இப்பகுதியில் இருந்து சென்னை செல்பவா்கள்
திருவண்ணாமலை சென்று அங்கிருந்து செல்லும் சொகுசுப் பேருந்துகளில் ஏறிச் செல்லவேண்டும்.
வாரத்தில் மூன்று நாள் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவா்களுக்கு சொகுசுப் பேருந்துகள் கிடைப்பது சிரமமாக உள்ளது. மேலும், மாதத்தில் பெளா்ணமி நாள்களில் இதே நிலை நீடிக்கிறது.
அதனால், செங்கம் பகுதியில் இருந்து அரசு குளிா்சாதன மற்றும் சொகுசு விரைவுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.