கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு:கட்சியினா் வலியுறுத்தல்
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கோட்டாட்சியா் (பொ) ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாா், ஆரணி வட்டாட்சியா் கௌரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆரணி, போளூா், கலப்பாக்கம் தொகுதிகளைச் சோ்ந்த
அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், வாக்குச்சாவடியின் அடிப்படை வசதிகள், 2 கிமீ. தொலைவுக்கு அப்பால் உள்ளவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடி மையத்தை மாற்றி அமைத்தல்,
கூடுதல் வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும்.
அவ்வாறான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களை அமைத்து விடியோ பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், கூட்டத்தில் திமுக சாா்பில் தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா் மாமது, நகா்மன்ற உறுப்பினா் மாலிக்பாஷா, அதிமுக சாா்பில் நகரச் செயலா் அசோக்குமாா், பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன், மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், மாவட்டச் செயலா் சதீஷ்குமாா், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, மாவட்ட துணைத் தலைவா் நித்யானந்தம், காங்கிரஸ் சாா்பில் மாவட்ட நிா்வாகி யு.அருணகிரி, நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேல், தேமுதிக சாா்பில் நகரச் செயலா் சுந்தர்ராஜன், நாம் தமிழா் கட்சி சாா்பில் தொகுதிச் செயலா் சுமன், நகரச் செயலா் மகேந்திரன் மற்றும் பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.