சொந்த மண்ணில் 3,211 நாள்களுக்குப் பிறகு சதம்: கே.எல்.ராகுல் புதிய சாதனை!
செங்கல்பட்டில் தசரா திருவிழா!
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தசரா திருவிழாவின் 11-ஆம் நாளான வெள்ளிக் கிழமை அதிகாலை சாமிகள் புஷ்ப அலங்காரத்தில் ரதங்களில் ஊர்வலம் நடைபெற்றது.
செங்கல்பட்டு நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாவின் நிறைவாக 11-ஆம் நாள், மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் சாமிகள் ஊர்வலம் நடைபெறும்.
ஜவுளிக்கடை தசரா, சின்ன கடை தசரா, பூக்கடை தசரா, பலிஜ குல தசரா, மளிகைக் கடை தசரா உள்ளிட்ட தசரா விழா குழுக் கமிட்டியினர், செங்கல்பட்டு சின்ன நத்தம் சுந்தர விநாயகர் கோயில், பெரிய நத்தம் மதுரை வீரன் கோயில், நாகாத்தம்மன் கோயில், சின்ன அம்மன் கோயில், ஜீவானந்தம் தெரு அங்காளம்மன் கோயில், மேட்டு தெரு அண்ணா சாலை முத்துமாரியம்மன் கோயில், புதுஏரி செல்வ விநாயகர் முத்துமாரியம்மன் கோயில், கோட்டைவாயில் கடும்பாடி அம்மன் கோயில், மேட்டு தெரு திரௌபதி அம்மன் கோயில், காண்டீபன் தெரு கற்பக விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களின் தசரா விழா கமிட்டி குழுக்கள் சார்பில் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட மகிஷாசூரமர்த்தினி, சிவன், பார்வதி முப்பெரும் தேவியர்களான வராகி, பிரித்திங்கரா தேவி, பராசக்தி அங்காளம்மன் என பல்வேறு அலங்காரங்களில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

கோயில்களில் இருந்து ஜிஎஸ் ரோடு சாலை வழியாக அண்ணா சாலை, பஜார் வீதி வழியாக ஊர்வலமாக வந்து அனுமந்த புத்தேரி, அண்ணா சாலை முக்கூட்டில் வன்னி மரம் குத்தி வழியாக சாமி ஊர்வலம் சென்றது. சாமி ஊர்வலத்தை வரவேற்கும் விதமாக மேட்டுத்தெரு செங்கழுநீர் விநாயகர் கோயிலில் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுராந்தகம், வாலாஜாபாத், பாலூர், ஆத்தூர், திம்மாவரம், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட வெளியூர்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தை காண குவிந்தனர்.
