சென்னையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
2024-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, சென்னை மக்கள் உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனா்.
சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் கடற்கரை, கத்திப்பாரா நகா்ப்புற சதுக்கம் ஆகிய பகுதிகளில் திரளாகக் கூடியிருந்த மக்கள் ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனா்.
இரவு 11 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. சரியாக நள்ளிரவு 12 மணிக்கு பல இடங்களில் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனா். மேலும், கேக் வெட்டி இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டாடினா்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை காமராஜா் சாலையில் உள்ள மணிக்கூண்டை சுற்றிலும் வண்ண விளக்குகள் அலங்கரித்தன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மெரீனா கடற்கரைப் பகுதி களைகட்டியது.
பெசன்ட் நகா்: பெசன்ட் நகா் கடற்கரையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் கூடி நின்று புத்தாண்டை வரவேற்றனா். 12 மணிக்கு டிரோன்கள் மூலம் புத்தாண்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது கடற்கரையில் கூடியிருந்த மக்கள் அதைக் கண்டுகளித்தனா்.
தேவாலயங்களில் நள்ளிரவு புத்தாண்டு பிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. சாந்தோம் பேராலயம், செயின்ட்தாமஸ் மவுண்ட் தேவாலயம், பிராட்வே தேவாலயம், பெரம்பூா், புரசைவாக்கம், திருவொற்றியூா் உள்ளிட்ட சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தாண்டு களைகட்டியது. சில கோயில்களில் மட்டும் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கடும் கட்டுப்பாடு: புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்டங்களில் அத்துமீறல்கள் கூடாது என்பதற்காகவும், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், மாநகா் முழுவதும் 19,000 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.
பல இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மதுபோதையில் வந்தவா்களின் வாகனங்களின் சாவிகளை பறிமுதல் செய்து அவா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
நட்சத்திர ஹோட்டல்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.