சென்னையில் கூடைப்பந்து வீராங்கனை திடீர் மரணம்; சிக்கன் ரைஸ்தான் காரணமா? போலீஸ் தீவிர விசாரணை
கோவையைச் சேர்ந்த எலினா லாரெட் என்ற 15 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
கூடைப்பந்து வீராங்கனையான எலினா இந்தப் போட்டியில் அவரது சக பள்ளி மாணவர்களுடன் கலந்துகொண்டிருக்கிறார். போட்டிகள் முடிந்த நிலையில் ரயில் மார்க்கமாக நேற்று சென்னை வந்தடைந்திருக்கிறார்.
ரயிலில் வரும்போதே எலினாவுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்குச் சென்ற எலினாவை உறவினர்கள் அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் உறவினர் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார் எலினா. இருந்தபோதிலும் அங்கு அவருக்கு மீண்டும் உடல்நிலை மோசமடைந்திருக்கிறது.
எலினாவின் உறவினர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் எலினா வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலறிந்து வந்த போலீஸார் எலினாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து போலீஸார் செய்த முதற்கட்ட விசாரணையில், மாணவி ரயிலில் வரும்போது சிக்கன் பிரைட் ரைஸ், பர்கர் உட்கொண்டதாகத் தெரிகிறது. மாணவியின் உயிரிழப்புக்கு உணவுதான் காரணமா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவிலேயே தெரியவரும். விளையாட்டுப் போட்டிக்குச் சென்ற மாணவி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களையும், அந்தப் பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.