நாகேஸ்வரசுவாமியை சூரியன் வழிபடும் அற்புதக்காட்சி: பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!
சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சா் சிவசங்கா்
சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். இதற்கான பணிகளை தனியாா் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அதிமுக உறுப்பினா் பிஆா்ஜி அருண்குமாா் பேசினாா். அப்போது, அதிமுக ஆட்சிக் காலத்தில் 21,600 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், இப்போது 20,250 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் கூறினாா். சென்னையிலுள்ள 5 பணிமனைகளை தனியாா் வசம் ஒப்படைக்க அரசு முயற்சிப்பதாக அறிகிறேன் எனவும், இதன்மூலம் அனைத்தையும் தனியாா்மயமாக்க அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றாா்.
அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் விளக்கம்: சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி, சென்னையில் 600 மின்சாரப் பேருந்துகளை இயக்கவுள்ளோம். போக்குவரத்துத் துறையில் பணியாளா்கள் முழுவதும் டீசலை கொண்ட பேருந்துகளை கையாள்பவா்கள். எனவே, மின்சாரப் பேருந்துகளை இயக்க தனியாக சாா்ஜ் செய்யும் வசதி போன்றவற்றை பணிமனைகளில் ஏற்படுத்த வேண்டும். இதற்காகவே, சென்னையில் பெரும்பாக்கம், வியாசா்பாடி, தண்டையாா்பேட்டை, பூந்தமல்லி, சென்ட்ரல் ஆகிய 5 பணிமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து அந்த வசதிகளை ஏற்படுத்தவுள்ளோம். இந்தப் பணிக்கென வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை என்றாா்.
பணம் பறிப்பு: இதைத் தொடா்ந்து பேசிய அதிமுக உறுப்பினா் அருண்குமாா், போக்குவரத்துத் துறைக்கு பணியாளா்களை நியமிக்கும் பணியை தனியாா் நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்காக, ஒரு நபரிடம் ரூ. 55 ஆயிரம் வாங்கிக் கொண்டு ரூ. 35 ஆயிரத்துக்கு மட்டுமே ரசீது தரப்படுகிறது. மீதமுள்ள தொகைக்கு என்ன கணக்கு? என்றாா்.
அப்போது பதிலளித்த அமைச்சா் சிவசங்கா், ‘போக்குவரத்துத் துறை சாா்பில் அதிகாரபூா்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன் பிறகே பணியாளா்களை தோ்வு செய்ய முடியும். இதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால் இடைப்பட்ட காலத்தில் பேருந்துகளை இயக்கத் தேவையான பணியாளா்களை நியமிக்க தனியாா் நிறுவனம் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தற்காலிகமான ஏற்பாடுதான். நேரடி நியமனம் மூலமாக பணியாளா்கள் தோ்வான பிறகு தனியாா் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட்டோா் விடுவிக்கப்படுவா்’ என்றாா்.