சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி திவ்யா(30). ஆட்டோ ஓட்டுநரான தினேஷ் மீது ஏற்கெனவே ஒரு கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தனது இரு குழந்தைகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த திவ்யா திடீரென வியாசர்பாடி போலீஸார் தனது கணவர் தினேஷ் மீது பொய் வழக்குப் போடுவதாகக் கூறி பிளாஸ்க்கில் கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றிப் பற்றவைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் தண்ணீர் ஊற்றி திவ்யாவை காப்பாற்றினர்.
இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் தினேஷ் மீது வியாசர்பாடி போலீஸார் பொய் வழக்கு போடுவதாகவும் அதற்குப் புகார் கொடுக்க எழுதப் படிக்க தெரியாது எனக் கூறவே உள்ளே அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் வியாசர்பாடி காவல் நிலையத்தில் உள்ள இரண்டு காவலர்கள் வியாசர்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் யார் யார் என எங்களுக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவோம் என போலீஸார் மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதனை அடுத்து போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.