ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
சென்னை: மாணவிக்குப் பாலியல் தொல்லை; கட்டாய திருமணம் - காவலர் உட்பட 3 பேர் சிக்கிய பின்னணி!
வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, குழந்தைகளுடன் ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். இந்த தம்பதியினரின் 14 வயது மகள், சென்னையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கடந்த 24-ம் தேதி முதல் காணவில்லை என ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், காணாமல் போன மாணவியும் அவரோடு படிக்கும் மாணவன் ஒருவனும் கடலூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் மீட்ட போலீஸார் அவர்களை குழந்தைகள் சீர்நோக்கு குழுவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து இந்த வழக்கை விசாரித்த போலீஸார் கூறுகையில், ``காணாமல் போன சிறுமி அவருடன் படிக்கும் மாணவன் ஒருவனோடு பழகியிருக்கிறார். இதை தெரிந்த மாணவியின் குடும்பத்தினர் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க ஆலோசித்திருக்கிறார்கள். அதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னுடன் படிக்கும் மாணவனுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். உடனே அந்த மாணவன், `உன்னை வெளியூருக்கு அழைத்துச் சென்று படிக்க வைக்கிறேன்' என்று மாணவியிடம் கூறி, அவரை கடந்த 25-ம் தேதி ஆட்டோவில் தான் குடியிருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு மாணவி வீட்டை விட்டு வெளியேறிய விவரத்தை தன்னுடைய அம்மாவிடம் மாணவன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் மாணவியைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதும் மாணவியை அந்தப் பகுதியில் உள்ள சர்ச்சில் கொண்டு போய் விட்டிருக்கிறார் மாணவனின் அம்மா.
இரவில் சர்ச்சை மூடியதும் எங்கும் செல்ல வழிதெரியாமல் மாணவி, கால்போன போக்கில் ரோட்டில் நடந்து வந்திருக்கிறார். நள்ளிரவில் சிறுமி ஒருவர் தனியாக வருவதைக் கவனித்த அவ்வழியாக பைக்கில் சென்ற போக்குவரத்துக் காவலர் ராமன் சிறுமியிடம் விசாரித்திருக்கிறார். அப்போது சிறுமி, தான் பள்ளியில் படிப்பதாகவும் தனக்கு வீட்டில் கட்டாய திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். உடனே காவலர் ராமன், என்னுடன் பைக்கில் வா என்று அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவலர் ராமன், மாணவியை அங்கு தங்க வைத்திருக்கிறார். அப்போது காவலர் ராமனிடம் போனை வாங்கிய மாணவி, தன்னுடைய நண்பனான பள்ளி மாணவனுக்கு போன் செய்து விவரத்தைக் கூறியிருக்கிறார்.
புறக்காவல் நிலையத்தில் மாணவியோடு தனியாக இருந்த காவலர் ராமன், திடீரென மாணவியிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கதறி அழுதிருக்கிறார். இதற்கிடையில் மாணவியின் நண்பனான மாணவனும் அவரின் அம்மாவும் அங்கு வந்திருக்கிறார்கள். அதைப் பார்த்த மாணவி, காவல் நிலையத்திலிருந்து வெளியே ஓடிவந்திருக்கிறார். அப்போது காவலர் ராமன், இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று மாணவியை மிரட்டியிருக்கிறார். இதையடுத்து மாணவியை அவரின் நண்பன், நண்பனின் அம்மா ஆகியோர் அழைத்துச் சென்று அந்தப் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இரவில் தங்கியிருக்கிறார்கள். பின்னர் காலையில் மாணவியும் மாணவனும் கடலூருக்குப் புறப்பட்டுச் சென்று வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள். இதற்கிடையில் மாணவியின் அம்மா கொடுத்த புகாரையடுத்து மாணவியையும் மாணவனையும் கடலூரில் மீட்டோம். மாணவி அளித்த தகவலின்படி காவலர் ராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறோம். மாணவிக்கு நடந்த இந்தக் கொடுமைக்கு சம்பந்தப்பட்ட பள்ளி மாணவனையும் அவனின் அம்மாவையும் எதிரிகளாகச் சேர்த்திருக்கிறோம்" என்றனர்.