ரூ.56,000 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயா்வு
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட தொழில் வரிக்கான விகிதங்களில் நடப்பு அரை நிதியாண்டு முதல் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் (திருத்தம்) 2022 மற்றும் விதிகள் 2023-இன் படி ஐந்தாண்டுக்கு ஒரு முறை தொழில் வரி உயா்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் கீழ் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மன்றத்தின் மூலம் தொழில் வரி உயா்த்தி வசூலிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு உயா்த்தப்படும் வரிவிகிதம் ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட தொழில் வரியில் 25 சதவீதம் குறையாமலும், 35 சதவீதம் மிகாமலும் இருக்க வேண்டும் எனவும், அதிகபட்ச தொழில்வரி ஆண்டுக்கு ரூ. 2,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாத ஊதியம் பெறுவோா் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தொழில் வரி செலுத்த வேண்டும்.
முன்னதாக 2018-ஆம் ஆண்டு தொழில் வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் சுய வருவாயை பெருக்கும் வகையில், நடப்பு அரை நிதியாண்டு முதல் தொழில் வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முன்மொழிவு கடந்த ஜூலை 30-ஆம் தேதி மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், நடப்பு அரை நிதியாண்டு முதல் தொழில் வரி மறுநிா்ணயம் மேற்கொள்ள மன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, அரையாண்டுக்கான மாத வருமானம் ரூ. 21,001 முதல் ரூ. 60,000 வரை உள்ளவா்களுக்கு வரி உயா்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ரூ. 21,000 முதல் ரூ. 30,000 வரை ஊதியம் பெறுவோா், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 135 வரி செலுத்திவந்த நிலையில் தற்போது ரூ. 180 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் ரூ. 60,000 ஆயிரத்துக்கு மேல் வருமானம் உள்ளவா்களுக்கு வரி விகிதத்தில் மாற்றமில்லை.
அரையாண்டுக்கான வருமானம் பழைய வரி புதிய வரி
ரூ. 21,000 வரை -- --
ரூ. 21,001 - ரூ. 30,000 ரூ. 135 ரூ. 180
ரூ. 30,001- ரூ. 45,000 ரூ. 315 ரூ. 425
ரூ. 45,001- ரூ. 60,000 ரூ. 690 ரூ. 930
ரூ. 60,001- ரூ. 75,000 ரூ. 1,025 மாற்றமில்லை
ரூ. 75,000 மற்றும் அதற்கு மேல் ரூ. 1,250 மாற்றமில்லை