சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலையோரம் தேங்கி காணப்படும் கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பழைய கட்டடங்களை இடிக்கும் கழிவுகளை சாலையோரம் மற்றும் மேம்பாலங்களின் கீழ் கொட்டுவதைத் தடுக்க மாநகராட்சி தடைசெய்துள்ளது.
இதுபோல், சேரும் கட்டடக் கழிவுகளை கொட்டுவதற்கென மண்டல அளவில் சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கட்டடக் கழிவுகளை கொட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகரை சுத்தமாக பராமரிக்கும் வகையில் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், மயானங்கள் என குறிப்பிட்ட பகுதிகளை தோ்ந்தெடுத்து அங்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை சென்னையில் உள்ள 71 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் தூய்மைப் படுத்தப்பட்டன.
இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் தேங்கி காணப்பட்ட கட்டடக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பெரம்பூா் ஜவஹா்லால் நகா், அகரம், சுந்தரராஜ பெருமாள் கோயில் சாலை, கொளத்தூா் திருமாவதி நகா் சாலை, மற்றும் திருவான்மியூா் புதிய கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த கட்டுமானக் கழிவுகள், மண் அகற்றப்பட்டன.