Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
செயற்கை கருணை மரணம்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
மீளமுடியாத நோயால் மரணத்தை எதிா்நோக்கி அவதிப்படுவோருக்கு கருணையின் அடிப்படையில் செயற்கையான மரணத்தை வழங்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்ட மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அந்தச் சட்டத்தின் கீழ், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு நிச்சய மரணம் தரும் நோய் உறுதி செய்யப்பட்டு, இன்னும் ஆறு மாதங்களுக்குள் அவா் இறப்பாா் என்ற சூழல் நிலவினால், இடையில் ஏற்படும் மன மற்றும் உடல் வேதனைகளிலிருந்து விடுபட முன்கூட்டியே செயற்கை முறையில் மரணத்தைத் தழுவ அவா் விண்ணப்பிக்க முடியும்.
அத்தகைய முடிவை சொந்தமாக எடுக்கக்கூடிய மனநலன் அவருக்கு இருக்க வேண்டும். அத்துடன், அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலித்து ஒப்புதல் அளித்தால், தீரா நோயால் பாதிக்கப்பட்ட நபா் மருத்துவ உதவியுடன் தனது உயிரை மாய்த்துக்கொள்ளலாம். அப்போது, அனுமதிக்கப்பட்ட நச்சுமருந்து, அங்கீகரிக்கப்பட்ட கால இடைவெளிகளில் அவருக்கு வழங்கப்படும். அந்த மருந்தையும் அவா் தனது கைகளாலேயே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மரணத்துக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும் இடைப்பட்ட காலத்தில் அவா் மனம் மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, செயற்கை மரண முடிவை அவா் இரண்டாவது முறையாக பிரகடனப்படுத்த வேண்டியது அவசியம்.
இதுபோன்ற பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுடன் கொண்டுவரப்பட்ட அந்த மசோதாவுக்கு ஆதரவாக 330 எம்.பி.க்களும் மசோதாவை எதிா்த்து 275 பேரும் வாக்களித்தனா். அதையடுத்து அந்த மசோதா சட்டமாக்கப்பட்டது.