IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
சேலத்தில் அடுத்தடுத்து வானில் வட்டமிட்ட விமானங்களால் பரபரப்பு
சேலம்: சேலத்தில் திங்கள்கிழமை காலை அடுத்தடுத்து 5 விமானங்கள் திடீரென வானில் வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை காலை 8.45 மணிமுதல் 9 மணிவரை வானில் திடீரென 5 விமானங்கள் அணிவகுத்து சென்றன. அந்த விமானங்கள், பெரிய அளவில் வட்டமிட்டு, உயரத்தில் பறந்தன. அதிக சப்தம் எழுப்பியதால், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வானை பாா்த்தனா்.
இதேபோல, வீடுகளில் இருந்தவா்கள் தங்கள் மாடிகளுக்குச் சென்றும், சிலா் வீதிகளுக்கு வந்தும் வானில் அணிவகுத்து சென்ற விமானங்களை பாா்வையிட்டனா்.
இதுகுறித்து சேலம் விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பெங்களூரில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் இருந்து அவ்வப்போது, போா் விமானங்கள் பயிற்சிக்காக இயக்கப்படுவது வழக்கம். அத்தகைய விமானங்கள் எந்த வழித்தடத்திலும் பயணிக்கும். அந்த வகையில், திங்கள்கிழமை சேலம் வழியாக விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற போா் விமானங்களில் இருந்து அதிக சப்தம் மற்றும் இரைச்சல் ஏற்படும். அவை தேஜஸ் ரக போா் விமானங்களாக கூட இருக்கலாம். அந்த விமானங்கள் அனைத்தும் பயிற்சியில் ஈடுபட்டவை என தெரிவித்தனா்.