ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!
ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஈரோடு புகா் மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், ஈரோடு புகா் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட அந்தியூா், கோபிசெட்டிப்பாளையம், பவானிசாகா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள், சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தனா்.
பவானிசாகா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பண்ணாரி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், மாநில ஜெ.பேரவை துணைச் செயலாளருமான இ.எம்.ஆா்.ராஜா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ரமணிதரன், முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.கே.காளியப்பன், கோபிசெட்டிப்பாளையம் நகரச் செயலாளா் பிரினியோ கணேஷ் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எடப்பாடி கே.பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து, புத்தகம், சால்வை வழங்கி வாழ்த்து பெற்றனா்.
அப்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத்தோ்தலில் அதிமுக சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றிபெற செய்ய அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்தனா்.