சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!
சேலத்தில் தடையை மீறி மறியல்: 50 மின் ஊழியா்கள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பைச் (சிஐடியு) சோ்ந்த 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் மின் திட்டச் செயலாளா் ரகுபதி தலைமை வகித்தாா். சுமைப்பணி சம்மேளன மாநிலத் தலைவா் ஆா்.வெங்கடபதி முன்னிலை வகித்தாா். தோ்தல் வாக்குறுதியின்படி மின்சார வாரியத்தில் பத்தாண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை அடையாளம்கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு இபிஎஃப் பிடித்தம் செய்ய வேண்டும்.
ஒரு பிரிவுக்கு இரண்டு பேரை கள உதவியாளராக ஒப்பந்த மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியா்களை நியமித்து நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அனல் மின் நிலையம், நீா் மின் நிலையம் பொது கட்டுமான வட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடா்ந்து தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 50 போ் கைது செய்யப்பட்டனா். இதில், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு), சேலம் மின் பகிா்மான வட்டத்தை சோ்ந்த ஊழியா்கள் கலந்துகொண்டனா்.