சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் கைது
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்து வருவதாக சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு ரேடியாலஜி மருத்துவர் ஒருவர் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை மடக்கிப் பிடித்த சுகாதாரத்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குடும்ப நலப்பணி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர், சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நந்தினி மற்றும் ஆத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் யோகானந்த் ஆகியோர் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மருத்துவர் தியாகராஜன் என்பதும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரேடியோலாஜி துறையில் பணிபுரிந்து கொண்டு, அங்கு ஸ்கேன் செய்ய வரும் பெண்களிடம் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.
சேலம் காந்தி ரோட்டில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்து வரும் அம்மாபேட்டை வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்த ஸ்ரீராம், அவருக்கு உடந்தையாக இருந்து புரோக்கராக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நந்தினி, சேலம் அரசு மருத்துவமனையின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டாக்டர் தியாகராஜன் மற்றும் புரோக்கர் ஸ்ரீராம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தை பாலினத்தை அரசு மருத்துவமனையில் தெரிவித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.