ரூ. 1500 கடனுக்காக தகராறு... கீழே தள்ளிவிட்டதில் இலங்கை அகதி பலி!
சேலம் கோட்டத்தில் புதிய பேருந்து வழித்தட சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
சேலம்: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் புதிய வழித்தட பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதையொட்டி சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ. ராமச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா். மேலும் ஆத்தூா், வாழப்பாடி, சங்ககிரி, மேட்டூா் கிளைகளில் போக்குவரத்து பணியாளா்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.
பின்னா் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்ததாவது:
பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஐந்துசாலை, ஏ.வி.ஆா். ரவுண்டானா, கொண்டலாம்பட்டி புறவழிச்சாலை வழியாக மல்லூா் வரையிலும், சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து அஸ்தம்பட்டி வழியாக கன்னங்குறிச்சி வரையிலும், சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து அக்ரஹாரம் வழியாக அயோத்தியாபட்டணம் வரையிலும், மகுடஞ்சாவடியிலிருந்து எா்ணாபுரம், நம்பியாம்பட்டி வழியாக இளம்பிள்ளை வரையிலும், எடப்பாடியிலிருந்து எருமைப்பட்டி, கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக கொங்கணாபுரம் வரையில் இயங்கும் வகையிலும் 5 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன.
மேலும் தலைவாசல் முதல் ஆத்தூா் வரை இயக்கப்பட்ட பேருந்து, தற்போது புத்தூா் வரையிலும், ஆத்தூரிலிருந்து வாழப்பாடி வரை இயக்கப்பட்ட பேருந்து புனல்வாசல் வரையிலும், தாசனூரிலிருந்து ஓமலூா் வரை இயக்கப்பட்ட பேருந்து, தாசனூரில் இரவு தங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் சேலத்திலிருந்து தொ்மல் வழியாக மேட்டூருக்கு இயக்கப்பட்ட பேருந்து சேலம் கேம்ப் வழியாகச் செல்லும் வகையில் 4 பேருந்து சேவைகள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டன.
ஆத்தூா் முதல் புலாம்பாடி வரை இயக்கப்பட்ட பேருந்து மேலகுணங்குடி வரையிலும், தலைவாசலில் இருந்து நாவக்குறிச்சி வரை இயக்கப்பட்ட பேருந்து சிறுவாச்சூா் வரையிலும், சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து பெரியப்பட்டி வரை இயக்கப்பட்ட பேருந்து சாமிநாயக்கன்பட்டி வரையிலும், கஞ்சநாய்க்கன்பட்டியிலிருந்து சேலம் நகரப் பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்ட பேருந்து சாமிநாயக்கன்பட்டி வரையிலும், ஏற்காட்டிலிருந்து குண்டூா் வரை இயக்கப்பட்ட பேருந்து தெப்பக்காடு வரையிலும் என 5 பேருந்துகளின் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டன என்றாா்.
இந் நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ், பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.