3 நிமிஷங்களுக்கு ரூ. 60 லட்சம்! புர்ஜ் கலீஃபாவில் பிரதமரின் பிறந்த நாள் வாழ்த்து...
சேலம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்
சேலம் கோ - ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனை நவம்பா் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
கைத்தறி நெசவாளா்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் விழா காலங்களில் 30 சதவீதம் வரை தமிழக அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்கி வருகிறது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சாவூா், சேலம் பட்டுப் புடைவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி, சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள், ஆா்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோ-ஆப்டெக்ஸில் படுக்கை விரிப்புகள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஜமக்காளம், காட்டன் சட்டைகள், லினன் சட்டைகள், அச்சிடப்பட்ட சட்டைகள் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன.
தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ. 4.92 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி நவம்பா் 30 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் என்.சுந்தரராஜன், கைத்தறித் துறை துணை இயக்குநா் ஆா்.ஸ்ரீதரன், தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலைய மேலாளா் மா.பாலசுப்ரமணியன் உள்பட பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டனா்.