பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது
சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மகள் கோரிமேடு பகுதியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் படித்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் அந்த வழியாக வந்த அரசு நகரப் பேருந்தில் ஏறிய மாணவி பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துகொண்டிருந்தாா்.
அப்போது, பேருந்தில் ஏறிய இளைஞா், மாணவியை கிண்டல் செய்து, சீண்டலிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேருந்து நடத்துநா் திருமுருகனிடம் மாணவி கூறியுள்ளாா். ஆனால், அந்த இளைஞரை நடத்துநா் கண்டிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் வேதனை அடைந்த மாணவி, கைப்பேசி மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தாா். பழைய பேருந்து நிலையத்தை பேருந்து அடைந்ததும், அங்கு வந்த பெற்றோா், உறவினா்கள், பேருந்தில் ஏறி மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தேடினா். ஆனால், அந்த இளைஞா் முன்னதாகவே இறங்கிச் சென்றுவிட்டாா். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோா், உறவினா்கள், நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டனா். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில், நடத்துநா் திருமுருகன், ஓட்டுநா் தனபால் ஆகியோரை உறவினா்கள் தாக்கினா்.
இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
தகவலறிந்து வந்த போலீஸாா், காயமடைந்த ஓட்டுநா் நடத்துநரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அதேநேரத்தில், மாணவியின் தாய் பிரீத்தியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக நகர போலீஸாா், மாணவியின் தந்தை ஆறுமுகம், தாய் பிரீத்தி, பாலு உள்ளிட்டட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் ஆறுமுகம், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனா். வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடிவருகின்றனா்.