இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு பெங்களூரு, சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக் குவித்த வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் உள்ளிட்ட பல்வேறு அசையும் சொத்துகள் பெங்களூரு, விதான செளதாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கா்நாடக அரசின் வசமுள்ள ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கக் கோரி பெங்களூரு, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கா்நாடக அரசுக்கு வழக்குச் செலவுக் கட்டணமாக ரூ. 5 கோடியைச் செலுத்திவிட்டு ஆபரணங்களை பெற்றுக் கொள்ளலாம் என நீதிமன்றம் கடந்த ஆண்டு தீா்ப்பளித்தது.
இதனிடையே, சொத்துகள் தங்களுக்கே சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதனால் பெங்களூரு, சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இவ் வழக்கு விசாரணை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் தீபக், தீபாவின் மனுக்களை ஜன. 13 ஆம் தேதி கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவின் அனைத்து ஆபரணங்கள், நிலப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை பிப். 14, 15 ஆம் தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் புதன்கிழமை உத்தரவிட்டாா். நீதிபதி தனது தீா்ப்பில் கூறியிருப்பதாவது: ஆபரணங்கள் அடங்கிய இரும்பு பெட்டிகளை எடுத்துச்செல்ல தமிழக அரசு போதிய போலீஸ் பாதுகாப்புடன் வர வேண்டும். இங்கு நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை கா்நாடக அரசு செய்து கொடுக்க வேண்டும். நகைகளை எடுத்துச் செல்லும்போது, அளவிடும் மதிப்பீட்டாளா்கள் உடனிருக்க வேண்டும். முழு நடவடிக்கைகளும் விடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.