கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
சொல்லப் போனால்... பட்ஜெட் சடங்கும் கோமிய மருந்தும்
பிரதமர் நரேந்திர மோடி அரசின் மூன்றாம் ஆட்சிக் காலத்தின் இரண்டாவது நிதி நிலை அறிக்கையை - பட்ஜெட்டை - பிப். 1, சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிர்மலா சீதாராமனைப் பொருத்தவரை ஓர் இடைக்கால பட்ஜெட் உள்பட இது தொடர்ச்சியான எட்டாவது பட்ஜெட்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டங்களும் பகலில் நடைபெற்றாலும் பட்ஜெட்டைப் பொருத்தவரை நாட்டின் விடுதலைக்குப் பிறகும் பல்லாண்டுகளாக மாலை நேரத்தில்தான் சமர்ப்பிக்கப்படும் – இந்தியாவை ஆண்ட பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் நேரத்துக்கு இணையாக என்று கூறுவார்கள். நாளிதழ் அலுவலகங்கள் எல்லாம் மாலையில் பரபரப்பாக இருக்கும், செய்திகளை விரைந்து முடித்து காலாகாலத்தில் அச்சுக்கு அனுப்ப வேண்டும் என்பதால்.
பின்னாளில் இந்த வழக்கம் மாற்றப்பட்டு, காலையிலேயே பட்ஜெட்டைச் சமர்ப்பிக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு காலத்தில் பட்ஜெட் வரப் போகிறது என்றாலே நாடு முழுவதும் ஒரு பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அதேபோல ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது அறிவிப்புகள் இருக்கும். வரிகள் ஏறும்; இறங்கும். விலைகள் கூடும்; குறையும். மக்களும் துயரப்பட்டும் மகிழ்ச்சி கொண்டும் அடுத்தடுத்த நாள்களுக்கு (அல்லது ஆண்டுகளுக்கு) கடந்துவிடுவார்கள்.
பட்ஜெட் உரை வாசிக்கப்படும்போதே, டிவி விலை உயர்ந்ததா? குளிர்சாதனப் பெட்டிகள் விலை உயர்வா? மின்விசிறிகள் - மின்சாதனங்கள் என்னவாகின? என்னென்ன பொருள்களின் விலைகள் குறையும்? ஏற்றுமதி – இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் என்ன? இவற்றால் விலை உயரப் போகும் பொருள்கள் என்னென்ன? என்று சில நாள்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.
பட்ஜெட்டுக்கு முந்தைய பழைய - அதே விலை என்றெல்லாம் சில வணிக நிறுவனங்கள் பொருள்களை விற்பதும் உண்டு; சில நூறு, ஐம்பது ரூபாய்களுக்காகப் பழைய தேதியிட்டு பில் போடுகிற பழக்கமெல்லாம்கூட இருந்தது!
இப்போதெல்லாம் மக்களைப் பொருத்தவரை பட்ஜெட் என்பதே தனியான ஒரு விஷயமல்ல என்கிற மாதிரியாகிவிட்டது. ஏதோ பட்ஜெட் வந்துதான் விலைவாசி உயர வேண்டும் என்பதெல்லாம் இல்லாமலாகி நிறைய ஆண்டுகளாகிவிட்டன. பட்ஜெட்டில் குறையும் என்றே அறிவித்தாலும்கூட எந்தப் பொருளும் பெரிதாக விலை குறைவதுமில்லை. உயர்ந்தால் உயர்ந்ததுதான். இந்த உயர்வுகளும் எதற்காகவும் காத்திருப்பதில்லை.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, அல்லது எப்போது வேண்டுமானாலும் (வரையறுக்கப்பட்ட எந்த ஒழுங்குமுறையும் கிடையாது) திடீர் திடீரென சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜி.எஸ்.டி.) கவுன்சில் கூடி, வரி விகிதங்களை எல்லாம் மாற்றி அமைக்கும். இதற்கான ஞானங்கள் அல்லது இடுகைகள் - இன்புட்ஸ் எவ்வாறு, எங்கிருந்து பெறப்படுகின்றன என்று தெரியவில்லை. ஆனால், விலைகள் மட்டும் பெரும்பாலும் எகிறும். நாம் பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில், சமூக ஊடகங்களில் அல்லது ஏதாவது வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிரப்படும் மீம்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் (கடைசியாக நடந்த கூட்டத்தில் பரிந்துரைத்ததாக மட்டுமே கூறப்பட்ட - ஒவ்வொரு வகை பாப்கார்ன்களுக்கும் வெவ்வேறு விதமான வரி விகிதங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டனவா? அடிக்கடி திரையரங்குகளுக்குப் படம் பார்க்கச் செல்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். டிக்கெட் விற்கிற விலைக்கு தியேட்டருக்குப் போகிற மாதிரியாகவா இருக்கிறது?).
ஆக, இன்றைக்கு இருக்கும் நடைமுறையில் விலை உயர்வுகளுக்காக யாரும் பட்ஜெட்டை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் ஜிஎஸ்டி கவுன்சில் கூடலாம், எப்போது வேண்டுமானாலும் செய்தியாளர்களை நிதித் துறை அமைச்சர் சந்திக்கலாம், அறிவிப்புகள் வெளியிடலாம், எப்போது வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் வரிகள் கூட்டப்படலாம். விலைகளும் அதிகரிக்கலாம் (நன்றாக உணர முடிகிற அளவுக்கு இப்போதைக்குள் எந்தப் பொருளுடைய விலையாவது குறைந்திருக்கிறதா? சும்மா, இந்தத் தக்காளி, வெங்காயத்தைக் கூறக் கூடாது; இவற்றின் விலைகள் எதிர்பாராத அளவில் குறைந்தால், ஏற்கெனவே துயரத்தில் இருக்கும் விவசாயிகள் இன்னமும் துயருறப் போகிறார்கள் என்று பொருள்!).
ஆனாலும் அன்றும் இன்றும் (ஒருவேளை என்றும்) மாறாததாக ஒரு விஷயம் மட்டும் இருந்துகொண்டுதானிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி விதிப்பு விகிதங்கள் பற்றிய எதிர்பார்ப்பு. காலந்தோறும் மாறாமல் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள், ஏமாறுவார்கள், மீண்டும் எதிர்பார்க்கத் தொடங்குவார்கள். இந்த வரிகளைப் பற்றிப் பெரும் பணக்காரர்களுக்கும் கவலையில்லை, ஏழை எளிய மக்களுக்கும் கவலையில்லை. ரெண்டுங்கெட்டான்களாக மாத ஊதியம் வாங்கிக்கொண்டிருப்போருக்குதான் கவலை. ஆனால், இப்போது இருந்த சில சலுகைகளும்கூட கையைவிட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன, வரி விலக்குகள் எல்லாமும்கூட விலக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மற்றபடி நம்ம வீட்டு பட்ஜெட்டுகள் எவ்வாறு நம்ம கட்டுக்குள் இல்லாமல் எகிறிக் கொண்டு, வலத்துக்கும் இடத்துக்கும் என இழுத்துக்கொண்டு, இம்சையைத் தருகின்றனவோ அதேபோலதான் மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்களும். பட்ஜெட் பாட்டுக்கு ஒரு பக்கம், செலவுகள் இன்னொரு பக்கம். திட்டமிடுதல் வேறு, நடப்பது வேறு! எல்லாருக்கும் தெரிந்துதான் இருக்கும். ம். பிப்ரவரி ஒன்னாம் தேதி என்றால் பட்ஜெட் தாக்கல் செய்துதானேயாகனும்!
இந்த வருஷத்து பட்ஜெட்ல என்னென்னவெல்லாம் அறிவிக்கப் போகிறார்கள், பார்க்கலாம். எப்படியும் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள் தெரிந்துவிடப் போகிறது!
பட்ஜெட் விஷயம் எல்லாம் நமக்கு என்னங்க முக்கியம், இன்றைக்கு அதைவிட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன, நாம் விவாதிப்பதற்கும் பேசிக் கொண்டிருப்பதற்கும் சண்டை போடுவதற்கும் என்று தோன்றுகிறதா? கண்டிப்பாகத் தோன்றத்தான் செய்யும்.
சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவொன்றில் பேசிய – நாட்டின் மிக உயர்ந்த அறிவியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான - சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) இயக்குநர் காமகோடி, மாட்டுக் கோமியத்துக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் காய்ச்சலால் அவதிப்பட்ட தன்னுடைய தந்தை கோமியத்தைக் குடித்ததால் நலம் பெற்றார்; தாமும் அவ்வப்போது குடிப்பதுண்டு என்றும் குறிப்பிட்டார்.
அறிவியல் நிறுவனத்தின் தலைவராக இருந்துகொண்டு இவ்வாறெல்லாம் பேசலாமா? என்று கண்டனங்கள் தொடங்கின. அறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகளை வளர்க்கலாமா? நம்பிக்கை வேறு, அறிவியல் வேறு என விவாத மன்றமும் நடந்துகொண்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் இதுபற்றிய விவாதங்களும் மீம்களும் களைகட்டின.
தன்னுடைய கருத்தை வலியுறுத்த மீண்டும் ஒரு முறை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காமகோடி, கோமியத்துக்குள்ள பூஞ்சை, பாக்டீரியா, அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
காமகோடி தெரிவித்ததாகக் கூறப்படும் அறிவியல் ஆய்வுத் தாளில், மனிதர்களிடம் இதுதொடர்பாக மேலும் நன்கு திட்டமிடப்பட்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று கூறப்படுவதுடன், பெரும்பாலான ஆய்வுகள் ஆய்வக நிலையில் இருக்கின்றன, அதாவது மனிதர்களிடம் சோதனை செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பலரும் எடுத்துக்காட்டுகின்றனர்.
கோமியத்துக்கு மருத்துவ குணம் உண்டா? இல்லையா? என்பது பற்றி அரசியல் கட்சித் தலைவர்களும் புகுந்து கருத்துகளைத் தெரிவித்தனர்; தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். நம்ம செய்தியாளர்களும்கூட சந்திக்கிற ஒவ்வொரு கட்சித் தலைவரிடமும் இதுபற்றிக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். மங்கையரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? என்ற கேள்விக்குப் பதில் தேடி அலைந்த திருவிளையாடல் தருமியைப் போல கோமியத்தின் சிறப்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
மாட்டுக் கோமியத்தில் ஆபத்தான 14 வகையான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவற்றில் சிலவற்றால் மனிதர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய, சிறுநீரக பாதிப்பு போன்றவை நேரிடலாம் என மருத்துவர்கள் சங்கம், அறிவியல் இயக்கம் உள்பட பலரும் எச்சரித்துள்ளனர். ஆபத்தான இந்தப் பாக்டீரியாக்களின் பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறது இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையொன்று.
இன்னொரு பக்கம் இயக்குநர் காமகோடியைப் பாரம்பரியத்தின் பழைமைச் சிறப்பை முன்வைப்பதாகத் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு போன்றோர் பாராட்டவும் செய்கின்றனர்; சமூக ஊடகத்தினரின் கருத்துகளைக் கண்டு பின்வாங்கிவிடாதீர்கள் என்று ஊக்குவிக்கவும் செய்கின்றனர்.
சுஷ்ருத சம்ஹிதை என்ற நூலிலிருந்து சில பக்கங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்த ஒருவர், மாட்டுக் கோமியம் மட்டும் அல்ல, எருமைக் கோமியம் (இதைக் கோமியம் என்று சொல்லலாமா? அல்லது சிறுநீர் என்பதா?), ஆடு, செம்மறி, குதிரை, யானை, கழுதை, ஒட்டகம் ஆகியவற்றின் கோமியம் / சிறுநீர்களால் கிடைக்கக் கூடிய மருத்துவப் பலன்களையும் பட்டியலிட்டிருந்தார். இந்த நூலிட்டுள்ள பட்டியலில் கடைசியில் இடம் பெறுகிறது மனித சிறுநீர்! – இவற்றைப் போன்றே மருத்துவ குணங்களைக் கொண்ட, விஷத்தால் ஏற்படக் கூடிய நோய்களைத் தீர்க்கக் கூடியது என்று குறிப்பிடுகிறது சுஷ்ருத சம்ஹிதை!
கோமியம் மருத்துவ குணம் கொண்டது என்றால், நம்பினால், குடிக்கிறவர்கள் குடித்துவிட்டுப் போகலாம். யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை, அவரவர் விருப்பம். அதையே பொதுவெளியில் சொல்லப் போகும்போது, அதுவும் அறிவியல் நிறுவனத்தின் தலைவராக இருந்துகொண்டு... சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது!
இதேமாதிரிதான் இப்போது பொறி பறக்கும் இன்னொன்றும்.
பெரியார் இப்படிச் சொன்னார் என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒன்றைச் சொல்லப் பற்றியெரிந்து கொண்டிருக்கின்றன விவாதங்கள்,
ஏறத்தாழ 94 வயது வரை வாழ்ந்து மறைந்தவர் பெரியார். தொடக்க காலத்தில் ஒரு 24 ஆண்டுகளைக் கழித்துவிட்டால், சுமார் 70 ஆண்டுகளாக, முக்கால் நூற்றாண்டு காலம், கணக்கிடவே முடியாத அளவுக்கு அவர் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். 70 ஆண்டு காலத்தில் ஏராளமான எத்தனையோ அரசியல் மாற்றங்கள். அவருடைய நிலைப்பாடுகளிலுமே ஏராளமான மாற்றங்கள். அவர் பார்த்தது, கேட்டது, படித்தது, அனுபவப்பட்டது என எல்லாவற்றைப் பற்றியும் கருத்துகளை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ஒரே விஷயம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை, அந்தந்த காலகட்ட நிலைமைக்கேற்ப மாற்றிக்கொண்டுமிருக்கிறார்.
பெரியார் இவ்வாறு சொன்னார் என்பதற்கான சான்றை சீமான் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரையிலும் அத்தகைய ஒன்றை, சான்றை, சீமானோ அவருடைய ஆதரவாளர்களோ முன்வைக்கவில்லை. ஆனால், இரண்டு வாரங்களையும் தாண்டி இந்தப் பிரச்சினை சுறுசுறுப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. எல்லாரும் இதுபற்றிக் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவுடைமை கற்பித்த கார்ல் மார்க்ஸின் தத்துவக் கருத்துகளை இளைய மார்க்ஸ், முதிய மார்க்ஸ் என்று இரண்டாகப் பிரித்துக்கொண்டு சில ஆய்வாளர்கள் அணுகுவார்கள். அதைப் போல என்று பார்த்தால் பெரியார் காலத்தையும் கருத்துகளையும் இன்னும் பலவாகப் பிரிக்க வேண்டியிருக்கும் (காங்கிரஸை, திமுகவை, காமராஜரை, ராஜாஜியை, அண்ணாவை... இதேபோல இன்னும் பலரை, பல விஷயங்களை அவர் விமர்சித்ததும் உண்டு, கொண்டாடியதும் உண்டு).
விவாதிக்கிற எல்லாருமே ஒன்றை வசதியாக மறந்துவிட்டார்கள். இதே பெரியார்தான் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார் - யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!
இவற்றுக்கும் பட்ஜெட்டுக்கும் என்ன தொடர்பு? இல்லைதானே? அதனால்தான், அதற்காகத்தான் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் போல.
இந்திய ரிசர்வ் வங்கியின் எத்தனையோ முட்டுக்கொடுத்தல் முயற்சிகளுக்குப் பின்னரும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்போ இன்னமும் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நூறைத் தொடலாம். இதன் விளைவு இந்தியப் பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதை எளிதில் ஊகிக்க முடியவில்லை.
அதிரடியைத் தொடங்கிவிட்டார் அமெரிக்க அதிபரான டிரம்ப். உலக நாடுகளிடம் எண்ணெய் விலையைக் குறை என்கிறார். கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்கிறார். அவருடைய நெருங்கிய நட்பு நாடுகளே அடுத்தடுத்து என்னென்ன செய்யப் போகிறாரோ, இதனால் தங்கள் நாடுகளின் பொருளாதாரங்களில் எத்தகைய விளைவுகள் நேரிடுமோ என அதிர்ந்துபோய்க் கிடக்கின்றன (சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருந்ததாகக் கூறப்படும் 18 அல்லது 19 ஆயிரம் இந்தியர்களை உடனடியாகத் திருப்பி அனுப்பப் போகிறார்களாம்).
ஒருபக்கம், மக்கள் பேசவும் விவாதிக்கவும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன, தீர்க்கப்படாமல்.
ஒவ்வொரு மாதமும் வீட்டுச் செலவுக்கான பட்ஜெட் எகிறிக்கொண்டேதான் செல்கிறது. ஒரு சோப்புக் கட்டியின் விலை, அல்லது பற்பசையின் விலை அல்லது இனிமேல் இது இல்லாமல் வாழ முடியாது எனப் பழக்கப்பட்டுவிட்ட (பாப்கார்ன் அல்ல) பல பொருள்களின் விலைகள் எல்லாம் தாறுமாறாக உயர்ந்துகொண்டே செல்கின்றன.
இன்னொரு பக்கம், கோமியத்தைக் குடிக்கலாமா, கூடாதா? பெரியார் பேசினாரா, இல்லையா? என்பன போன்ற எத்தனையோ விஷயங்கள் தொடர்ச்சியாக யார் யாருடைய முன்முயற்சியின் விளைவாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன!
ம். சும்மா பேச்சுதானே, பேசுவோம்.